பசுமாடுகளை கத்தியால் குத்திக் கொன்ற தாய் மற்றும் 2 மகன்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள பூசாரிப்பட்டி பகுதியில் வசிக்கும் தெய்வம்-லட்சுமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமாக 4 பசுமாடுகளை வளர்த்து வந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தொழுவத்தில் கட்டியிருந்த 4 பசு மாடுகள் காணாமல் போனது. இதனால் லட்சுமியின் குடும்பத்தினர் பசுக்களைத் தேடி அலைந்துள்ளனர். அப்போது அவர்களது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் சுடுகாட்டு பகுதியில் 3 பசுக்கள் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடன் இறந்து கிடந்ததை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் ஒரு மாடு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. அந்த மாட்டிற்கு கால்நடை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் வளர்மதி மற்றும் அவரது மகன்களான வடிவேல், சக்திவேல் ஆகியோர் இணைந்து பசுக்களை கொன்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது அப்பகுதியில் சகோதரர்கள் இணைந்து ஆட்டு இறைச்சி கடை நடத்தி வந்துள்ளனர். அந்த கடைக்கு அருகில் லட்சுமி தனது மாடுகளை கட்டியதால் சகோதரர்களுக்கு அது இடையூறாக இருந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோபமடைந்த வடிவேலும், சக்திவேலும் நள்ளிரவு நேரத்தில் மாடுகளை பிடித்து சென்று கத்தியால் குத்தி கொன்றது தெரியவந்துள்ளது.