அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் இணையதள நண்பர் வீட்டின் பாதாள அறையில் ஆடைகளின்றி மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
அமெரிக்காவில் வசிக்கும் மடைல் என்ற 19 வயது மாணவி, மாயமானதால் அவரின் குடும்பத்தார் காவல்துறையினரிடம் புகார் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில், மடைல் கடந்த 13 ஆம் தேதி அன்று ஒரு தங்கும் விடுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தார்.
அதன் பின்புதான் அவர் காணாமல் போயிருக்கிறார். எனினும் அவரின் தொலைபேசியிலிருந்து கடந்த 14ஆம் தேதி அன்று, அவரின் குடும்பத்தினருக்கு, “I Love U” என்று குறுந்தகவல் வந்திருக்கிறது. அதன்பின்பு, அவரின் தொலைபேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. காவல்துறையினர், செல்போன் டவரை ஆராய்ந்து, கடைசியாக அவர் செல்போன் பயன்படுத்திய பகுதியை கண்டறிந்தனர்.
சுமார் 500 நபர்களின் செல்போனை ஆராய்ந்து பார்த்த காவல்துறையினர், இறுதியாக பிரவுன் என்ற இளைஞரின் வீட்டிற்கு சென்றார்கள். அவர், தான் மட்டும் தான் இந்த வீட்டில் இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார். ஆனால், அவரின் வீட்டிற்கு அருகில், மடைல்-ன் ஐ.டி கார்டு கிடந்தது. அதனை பார்த்த காவல்துறையினர், வீட்டை சோதனை செய்ததில், அந்த வீட்டின் பாதாள அறைக்குள் மடைல் ஆடைகளின்றி கிடந்திருக்கிறார்.
உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டனர். அதாவது, இருவரும் இணையதளம் மூலம் பழகி, பின்னர் நேரில் சந்திக்க தீர்மானித்துள்ளனர். அந்த இளைஞர், மடைலை தன் வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார். அவரின் வீட்டிற்கு சென்ற பின், மடைலிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
மேலும், அந்த இளம்பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது செல்போனை பறித்து, அந்த இளைஞர் தான் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறார். தற்போது காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து, பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், “உங்களுக்கு தெரியாத நபர்களுடன் பழகும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்று பலமுறை எச்சரித்தும், அறிமுகம் இல்லாத நபரின் வீட்டிற்கு அந்த இளம்பெண் தனியாகச் சென்றிருக்கிறார். இது, அந்த குற்றவாளிக்கு வாய்ப்பு அமைத்துக்கொடுத்தது போல் ஆகிவிட்டது” என்று கூறியிருக்கிறார்கள்.