இந்தியாவின் தலைநகர் டில்லியில் அரசுப் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டில்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியில் மக்களுக்கு நலன் அளிக்கும் அடிப்படையில் பல்வேறு சிறந்த திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் டில்லி அரசுப் பள்ளியில் வேலை பார்க்கும் சிறப்பு வருகை மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குமாறு தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வந்துள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா தொற்று காரணமாக ஏற்பட்ட நிதி நெருக்கடியினால் ஊதிய உயர்வு வழங்க முடியாத நிலை நிலவியது. இந்நிலையில் சிறப்பு வருகை தரும் ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் டில்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா அவர்களை நேரில் சந்தித்து ஊதிய உயர்வு குறித்த கடிதத்தை அளித்துள்ளனர். இது தொடர்பாக டில்லி துணை முதலமைச்சரான மணீஷ் சிசோடியா தன் ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதாவது டில்லி அரசுப் பள்ளிகளில் வேலை பார்த்து வரும் சிறப்பு வருகை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கையை அரசு ஏற்று இருக்கிறது என்று தெரிவித்து உள்ளார். அதுமட்டுமின்றி ஊதிய உயர்வு வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் விரைவாக சம்பள உயர்வு வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இவ்வாறு டில்லி முதலமைச்சரின் இத்தகைய பதிவு சிறப்பு வருகை ஆசிரியர்கள் மற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.