நாடு முழுவதும் ஒமைக்ரான் பரவல் தொடர்ந்து பரவி வருகின்றது. இதுவரை இந்தியாவில் 415 க்கும் மேற்பட்டோர் ஒமைக்ரான் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஒமைக்ரான் பரவல் காரணமாக மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு பரிந்துரை செய்துள்ளது.
இது தொடர்பாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஒமைக்ரான் தொற்று நாடு முழுவதும் தீவிரமாக பரவி வரும் சூழலில், மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மீண்டும் ஆன்லைன் வழி வகுப்பு மற்றும் தேர்வுகளை நடத்துவதற்கு முன்வரவேண்டும். இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உரிய முடிவுகளை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒமைக்ரான் பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் மீண்டும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் எடுக்கப்படுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.