அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக 50,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள், மத்திய அரசு ஒதுக்கும் நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ஒரு பங்கும் சேர்த்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் 2020 ஏப்ரல் முதல் நேற்று வரை 36,700 இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து உச்ச நீதிமன்றம் 50000 ரூபாய் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட பின்பும், ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையிலும், இதுவரை இந்த அரசு நிவாரணம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பாதிக்கப்பட்ட மக்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர். எனவே உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 50,000 ரூபாயாவது உடனடியாக வழங்க வேண்டும். இனியும் காலதாமதம் செய்தால் இறந்தவர்களின் குடும்பத்தினர் வீதியில் இறங்கி போராடுகின்ற சூழ்நிலை ஏற்படும் என்று அதில் அவர் கூறியுள்ளார்.