தமிழகத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு நீட் தேர்வு எழுத விரும்புபவர்களுக்கு இலவச தேர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகின்றது. நீட் தேர்வு தமிழகத்தில் 2018 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. 2018 முன்னதாக பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் வைத்து மருத்துவத்துறையில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மருத்துவ கல்லூரிகளில் சேர முடியும். இந்த தேர்வுக்கு 12 வகுப்பு பாடங்கள் மட்டுமின்றி இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் வெளியிடப்படும் நீட் தேர்வுக்கான பாடங்களையும் படிக்க வேண்டி உள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். அதனால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் அதிக அளவில் தங்களை மருத்துவ துறையில் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு பல்வேறு சலுகைகள் மற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு இந்த ஒதுக்கீட்டை பயன்படுத்திக்கொள்ளும் வகையில் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. தற்போது திட்டத்தின் கீழ் டாப்பர் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. இந்த பயிற்சியில் சேராத மாணவர்களுக்கு வரும் ஜனவரி முதல் 2 மாதங்களுக்கு இலவச பயிற்சி நடத்தப்பட உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.