ஆங்கில புத்தாண்டு தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் மிகவும் விசேஷமானது. ஏனெனில் மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் வழிகளில் 365 படிக்கட்டுகள் உள்ளது. இது ஒரு வருடத்தைக் குறிக்கும் என்பதால் இங்கு ஆண்டுதோறும் டிசம்பர் 31 மற்றும் 1ஆம் தேதிகளில் திருப்புகழ் திருப்படி திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். இந்த விழாவில் பல்வேறு பஜனைக் குழுவினர் பங்கேற்று ஒவ்வொரு படியிலும் சிறப்பு பூஜைகள் செய்து பாடல் பாடியவாறு கோவிலுக்குள் சென்று வழிபடுவார்கள்.
இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழா தொடர்பான ஆலோசனைக் கூட்டம், திருத்தணி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கோவில் அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் புத்தாண்டு தரிசன நிகழ்ச்சியை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதி ஆகிய இரண்டு நாட்களில் கோவிலில் நடைபெறும் பஜனைகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளை ரத்து செய்வதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.