அரியானா மாநிலத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ அசீம் கோயல் காங்கிரஸ் கட்சியினுடைய முக்கிய தலைவரான ராகுல் காந்தியை குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதாவது, “ராகுல் காந்தி இந்து மதத்தை சேர்ந்தவரா இஸ்லாமியரா அல்லது கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவரா என்று முதலில் அவருக்கே தெரியவில்லை. இது தொடர்பாக ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும். அவர் நாட்டை பற்றி கவலைப்பட தேவையில்லை. ஆனால் அவருடைய குடும்பத்தின் வரலாற்றை குறித்து தான் கவலையடைய வேண்டும்” என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பாக ராகுல் காந்தி இந்து மற்றும் இந்துத்துவா போன்றவற்றை ஒப்பிட்டு அண்மையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அவர் “இந்துக்கள் உண்மையின் வழியே பின்பற்றுகிறவர்கள். அதே நேரத்தில் இந்துத்துவா, மதம் என்ற போர்வையில் கொள்ளையடிக்கிறது’ என்ற கருத்தை தெரிவித்திருந்தார். அரியானாவின் அம்பாலா நகர தொகுதியின் எம்எல்ஏ-வாக உள்ள அசீம் கோயல், ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.