வெங்காய உற்பத்தி குறைவே விலை உயர்வுக்கு காரணம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விலை உயர்வு குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
அதேநேரம் வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர அயல்நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது. எகிப்து போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பபடும் வெங்காயம், தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சந்தைகளுக்கு கொண்டு வரப்படுகின்றன.
இந்த நிலையில் வெங்காய விலை உயர்வு பற்றி பாராளுமன்ற மக்களவையில் நேற்று பேசிய உறுப்பினர்கள் விலை அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:-
மாநிலங்கள் தெரிவித்த தகவல்களின்படி கடந்த 30-ந் தேதிக்குள் 69.90 லட்சம் டன் வெங்காயம் உற்பத்தியாகும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் 53.67 லட்சம் டன் வெங்காயம் மட்டுமே உற்பத்தியானது. இதன் காரணமாக வெங்காய உற்பத்தியில் 16 லட்சம் டன் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இது கண்டிப்பாக ஒரு பற்றாக்குறைதான். தற்போதைய சூழ்நிலையில் விலை உயர்வு பிரச்சினைக்கு இதுதான் காரணம். எனினும் இது இயற்கைதான். இந்த பிரச்சினையை தீர்க்க பலவகையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக ஏற்றுமதிக்கு தடை, இறக்குமதிக்கு அனுமதி என பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு ,மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.