சென்னையில் பிரதமரான நரேந்திர மோடியின் மன் கீ பாத் எனப்படும் மனதின் குரல் நிகழ்ச்சியை தமிழக பாஜக முன்னாள் தலைவரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் பொது மக்களுடன் இணைந்து கேட்டு மகிழ்ந்தார்.
இதனையடுத்து அமைச்சர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் நிகழ்ச்சி மூலமாக ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் நாட்டு மக்களிடையே பிரதமர் உரையாற்றி வருகிறார். இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் பல்வேறு சிறப்புகளை எடுத்துக் கூறி இருக்கிறார். வரும் புத்தாண்டில் எல்லோரும் ஒரு சபதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதாவது தேசத்தின் வளர்ச்சிக்காகவும் சமுதாயத்தின் வளர்ச்சிக்காகவும் எவ்வாறு நம்மை கட்டமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும், அதற்காக நம்மை எவ்வாறு தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துள்ளார்.
கேப்டன் வருண் சிங் கின் வீரம், தீரம் தொடர்பாகவும் அவர் தம் ஆசிரியருக்கு எழுதிய கடிதம் குறித்தும் எடுத்துக்கூறி தேர்வுக்கு மாணவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும் என்பதையும், அடுத்தமுறை கூற இருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார். நாம் மிகப்பெரும் தடுப்பூசி இயக்கத்தை செயல்படுத்தி வருகின்றோம். ஆகவே யாரும் செய்யாத சாதனையை நம் நாடு செய்துள்ளது. நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்ற பின் மீனவர் சுட்டுக் கொல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை அரசு நம் மீனவர்களை கைது செய்வது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்ற மாதம் கூட 23 நபர்கள் கைது செய்யப்பட்ட போது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலையிட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுத்தார். தற்போதுகூட 55 நபர்களை கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை விடுவிக்க வலியுறுத்தி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
அவரும் அதற்கு முன்பாகவே மீனவர்களை விடுவிக்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கக்கூடாது என்பதே அனைவரது எண்ணம் ஆகும். இதுகுறித்து கூட்டுக்குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 3 மாதங்களுக்கு ஒரு முறை கூடவேண்டிய இந்தக் குழு கொரோனா காரணமாக கூடவில்லை. ஆகவே விரைவில் இந்தக் குழு கூடி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மீனவர்கள் கைது செய்வதற்கு எல்லை தாண்டுதல் மட்டும் காரணமாக இருக்காது. மீன் பிடிப்பதற்காக 20 நாட்டிக்கல் மைல் தொலைவில் உள்ள சர்வதேச எல்லையை நமது மீனவர்கள் கடப்பதாலேயே இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இவ்வாறு கூட்டுக்குழு மூலம் மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் வரும் காலங்களில் தடுப்பதற்கான நடவடிக்கைமேற்கொள்ளப்படும். சட்ட திட்டங்களின்படி மீனவர்களை விடுவித்து அவர்களை விரைவில் தாயகம் திரும்ப செய்வோம். 15 முதல் 18 வயது குழந்தைகள், முன்களப் பணியாளர்கள் போன்றோருக்கு தடுப்பூசி வழங்க உத்தரவிட்டுள்ள பிரதமருக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். கருத்து சுதந்திரத்தை அவமதிப்பது என்பது திமுகவினருக்கு வாடிக்கையான ஒன்று ஆகும். ஒரு கருத்தை கூறினால் உடனடியாக கைது செய்கிறார்கள். ஆனால் திமுகவினர் மற்றும் அதனுடன் தொடர்புடையவர்கள் சர்ச்சைச்குரிய கருத்து கூறினால் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. எனினும் மாற்று கட்சியினர் கருத்து கூறினால் நிலைமை வேற மாதிரி உள்ளது. திமுக ஆட்சியில் கருத்து சுதந்திரம் பெரும் சவாலாகவே இருக்கிறது. இதனிடையில் முரசொலி மூல பத்திரத்தை நான் காட்ட சொன்னதற்காக என் மீது பல்வேறு வழக்குகள் போடபட்டாலும் நான் எதிகொள்ள ரெடியாக இருக்கிறேன்” என்று அவர் கூறினார்.