குளத்திற்கு சென்ற நபர் நிலைத்தடுமாறி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள பவுசுப்பேட்டை கிராமத்தில் இளங்கலை பட்டதாரியான சந்திரமோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தினக்கூலி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சந்திரமோகன் பவுசுபேட்டையிலுள்ள மருத்தானி குளத்தில் கை, கால்களை அலம்பி விட்டு திரும்பும்போது தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கிவிட்டார்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூழ்கிய சந்திரமோகனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சந்திரமோகன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இந்த சம்பவம் குறித்து சந்திரமோகனின் சகோதரர் சக்திவேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.