Categories
அரசியல்

“பங்கேற்போம்…. செயல்படுவோம்” 2022-ல் இதை நடக்கவே விடக்கூடாது…. 2021-ல் நெஞ்சை உலுக்கிய சம்பவங்கள்….!!

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்களை நாம் தினந்தோறும் செய்திகளில் படித்து வருகிறோம். சிறுமிகள், மாணவிகள், பெண்கள் என அனைவரும் பள்ளியிலோ அல்லது வேலைக்கு செல்லும் இடங்களிலோ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். இந்நிலையில் தேசிய மகளிர் ஆணையம் அளித்த தகவலின் படி 2021-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் கடந்த ஆண்டை விட 46 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தியாவை பொறுத்தவரை 2021-ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரை பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக 19, 953 வழக்குகள் போடப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் அதிகமாக பதிவான மாநிலங்களின் பட்டியலில் உத்திரபிரதேசம் முதலிடத்தை பெற்றுள்ளது. இங்கு 10,084 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. இதனையடுத்து 2,147 வழக்குகள் பதியப்பட்டு டெல்லி 2-வது இடத்திலும், 995 வழக்குகள் பதியப்பட்டு ஹரியானா 3-வது இடத்திலும் உள்ளது. 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் பெண்களுக்கு எதிராக 375 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

இவ்வளவு ஏன், இந்த 2021-ஆம் ஆண்டில் நம் மனதை உலுக்கிய பல சம்பவங்களை நாம் செய்திகளில் பார்த்திருப்போம், படித்திருப்போம். அதன் படி கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்த 17 வயது மாணவி ஆசிரியர் மீதுன் சக்கரவர்த்தியால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் ஆசிரியரும், மாணவியும் பேசிய ஆடியோ பதிவுகள் வலைத்தளத்தில் வைரலானது. இதனை அடுத்து கரூர் மாவட்டத்தில் தனது தாயுடன் வசித்து வந்த சிறுமி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில் பாலியல் துன்புறுத்தலால் சாகும் கடைசி பெண் நானாகத்தான் இருக்க வேண்டும் என அந்த சிறுமி குறிப்பிட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து டெல்லி கான்கேட் பகுதியை சேர்ந்த 9 வயது சிறுமி பாதிரியார் ராதே ஷ்யாம் உள்பட 3 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் உத்தரபிரதேச மாநிலத்தில் பெற்ற மகளை 5 ஆண்டுகளாக வீட்டிற்குள் அடைத்து வைத்து தந்தை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்வாறாக பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படி தொடர்ந்து பல செய்திகளை நாம் பார்த்த வண்ணம் மட்டுமே உள்ளோம்.

இதனை தடுக்கும் பொருட்டு பாதிக்கப்பட்ட மாணவிகள் (சைல்டு லைன்) 1098, 14417, 181 போன்ற  இலவச எண்களை தொடர்பு கொண்டு தங்களது புகார்களை தெரிவிக்கலாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் சுவரொட்டிகள், நிகழ்ச்சிகள் மூலமாக மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மேலும் தமிழக முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது ஒரு தீர்வாகாது. எனவே குற்றவாளிகளை தண்டிக்கும் பொருட்டு மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு நாம் நம் வீட்டு பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களுக்கு தைரியத்தையும், எதையும் எதிர்கொள்ள கூடிய துணிச்சலையும் கற்றுக்கொடுத்து இதுபோன்ற பிரச்சினைகள் நடக்காமல் தடுக்க வழிவகுப்போம்.

மேலும் நம் வீட்டு பெண்களுக்கு மட்டுமில்லாமல் நமக்கு தெரிந்தவர்களோ அல்லது தெரியாதவர்களோ யாராக இருப்பினும் அவர்கள் பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட பிரச்சினைகளில் சிக்கிக்கொண்டிருப்பதாக உணர்ந்தால் சட்ட ரீதியாக அப்பிரச்சினைகளில் இருந்து விடுபட அவர்கள் செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்தும், புகார் அளிப்பது குறித்தும் எடுத்துரைப்போம். வருகின்ற 2022-ஆம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக நடக்ககூடிய பாலியல் குற்றங்களை குறைப்பதில் அரசோடு சேர்ந்து நாமும் பங்கேற்ப்போம் என உறுதிமொழி எடுத்து பெண்களுக்கான பாதுகாப்பான மாநிலமாக தமிழகத்தை மாற்றிட வழிவகுப்போம்.

Categories

Tech |