நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. இம்மசோதாவிற்கு திமுக எதிர்ப்பும், அதிமுக ஆதரவும் தெரிவித்து வாக்களித்தன. இஸ்லாமியர்களையும், ஈழத் தமிழ் அகதிகளையும் வஞ்சிக்கும் இம்மசோதாவைக் கொண்டுவந்ததாக மத்திய அரசையும், அதற்கு ஆதரவளித்த தமிழக அரசையும் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சைதாபேட்டையில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான திமுகவினர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசையும், மாநில அரசையும் கண்டித்து உதயநிதி கண்டன முழக்கங்களை எழுப்பினார். அப்போது, குடியுரிமை திருத்த மசோதா நகலைக் கிழித்தெறிந்து உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பின்னர், அண்ணா சாலையில் பேரணியாக சென்ற திமுகவினர் திடீரென சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அவர்களைக் காவல் துறையினர் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து, அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்டதாக உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அனைவரும் அடைக்கப்பட்டனர். அங்கு வந்த திமுக பொருளாளர் துரைமுருகன், தயாநிதி மாறன் உள்ளிட்டோர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து ஆர்ப்பாட்டம் வெற்றி அடைந்ததற்கு வாழ்த்து தெரிவித்தனர்.