இந்தியாவில் கடந்த ஆண்டு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் சற்று குறைந்து வந்த நிலையில் தென் ஆப்ரிக்காவில் ஒமைக்ரான் என்ற புதிய வைரஸ் உருமாறி உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. இந்த வைரஸ் இந்தியாவில் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தேவைப்பட்டால் மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தலாம் என்று மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உள்துறை அமைச்சகம் செயலாளர் அஜய் பல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வைரஸ் மற்றும் ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. மாநில அரசுகள் சூழ்நிலையை ஆய்வு செய்து தேவைப்பட்டால் உள்ளாட்சி அளவில் மற்றும் மாவட்ட அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முடிவு எடுக்கலாம். அதனைத் தொடர்ந்து பண்டிகை காலங்களில் மக்கள் கூடுவதை கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை விதிக்கலாம். பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயமாக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் பொது இடங்களில் எச்சில் துப்ப தடை செய்யப்பட வேண்டும். அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். மேலும் பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் ஆகிய வழிகாட்டுதலை கைவிடக்கூடாது. 2022ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை பேரிடர் மேலாண்மை சட்டம் முறையில் இருப்பதால் சட்டத்தை மீறுவோர் மீது பிரிவு 51 60 ன் கீழ் நடவடிக்கை எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.