அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அப்பியாபாளையம் பகுதியில் மாறன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாய கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாறன் அப்பியாபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள கடை முன் இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது நம்பியூரில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்து மற்றொரு பேருந்தை முந்திச் சென்று இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த முதியவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த மாறன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் விபத்துக்குள்ளான பேருந்து நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து பேருந்தை துரத்தி சென்று பெருமாநல்லூரில் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெருமாநல்லூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஓட்டுநர் மற்றும் நடத்துநரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கோஷமிட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக கூறி விசாரணை நடத்தினர். இதனையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.