ஆவின் உள்ளிட்ட நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.3 கோடி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்நிலையில் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி முன் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனையடுத்து கடந்த 17-ஆம் தேதி முதல் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
வெவ்வேறு கார்களில் மாறி மாறிச் சென்று அவர் தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆண்ட்ராய்ட் செல்போனை பயன்படுத்தாமல், சாதாரண பட்டன் கைப்பேசியை ராஜேந்திர பாலாஜி பயன்படுத்தி வருவதாகவும், எனவே அவர் இருக்கும் இடத்தை கண்டறிவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் பதுங்கியுள்ள இடத்தை நெருங்கிவிட்டதாக தெரிவித்துள்ள காவல்துறையினர், இன்றோ அல்லது நாளையோ அவர் கைது செய்யப்படுவார் எனத் தகவல் அளித்துள்ளனர்.