இலங்கைக்கு கடத்த முயன்ற 150 கிலோ கடல் அட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் வடக்கு கடற்கரை பகுதியில் கடலோரக் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கோட்டைசாமி மற்றும் வனசரகர் வெங்கடேசன் ஆகியோரின் தலைமையில் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சந்தேகப்படும் படியாக வந்த ஆம்னி வேனை ஒன்றை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.
அப்போது அதிகாரிகள் நடத்திய சோதனையில் அரசால் தடைசெய்யப்பட்ட 150 கிலோ கடல் அட்டைகள் வேனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் வாகனத்தில் இருந்த ரியல்தீன் என்பவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த கடல் அட்டைகள் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்டது என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.