இந்தியாவில் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி தர வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடியும் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு ஜனவரி 3 முதல் தடுப்பூசி போடப்படும் என்றும், 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி ஜனவரி 10 முதல் தொடங்கும் என்றும் அறிவித்தார்.
இதையடுத்து சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கும், பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது பற்றிய பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகிறது. ஏற்கனவே போட்ட தடுப்பூசியைப் போட வேண்டுமா? அல்லது வேறு ஒரு தடுப்பூசி செலுத்தலாமா? அல்லது இரண்டையும் சம அளவில் கலந்து செலுத்தவேண்டுமா? இது எதிர்ப்பு சக்தியை அதிகரிக்குமா? என்ற விவாதங்கள் சர்வதேச அரங்கில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவை பொருத்தவரை கோவிஷீல்ட், கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகள் போடப்பட வரும் நிலையில், ஜனவரி 10-ஆம் தேதி முதல் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்க உள்ளது. அதனால் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவது பற்றி வல்லுநர் குழு கூடி ஆலோசனை செய்து வருகின்றனர். அந்த ஆலோசனையில் பூஸ்டர் டோஸ் செலுத்தும் போது ஏற்கனவே செலுத்திய தடுப்பூசி மட்டுமே செலுத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஜனவரி 3-ஆம் தேதி தொடங்க உள்ள சிறுவர்களுக்கான தடுப்பூசி இயக்கத்தில் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசியை விருப்பத் தேர்வாக இருக்க வேண்டும். ஏனெனில் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே அவசரகால பயன்பாட்டுக்கு செலுத்த மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.