பள்ளிக்கல்வித்துறையின் அறிவிப்பை மீறி விடுமுறை நாட்களில் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொரோனா பெரும் தொற்று காரணமாக பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படாததால் ஒவ்வொரு ஆண்டும் விடப்படும் அரையாண்டு விடுமுறை இருக்காது என்று பேசப்பட்ட நிலையில், கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் விடுமுறை உண்டு என்று கூறி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இந்த அறிவிப்பை தொடர்ந்து கல்வித் துறை சார்பில் ஒரு அறிவிப்பும் வெளியிடப்பட்டது. அதில் டிசம்பர் 31-ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கல்வித்துறையின் அறிவிப்பை மீறி சில தனியார் பள்ளிகள் வகுப்புகள் நடத்துவதாக புகார் வந்தது. இதை தொடர்ந்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி வகுப்புகள் எடுக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.