ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கில் பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அதில் ஒரு சிலர் உங்களின் மொபைலில் தொடர்பு கொண்டு உங்களது வங்கிக் கணக்கு குறித்த அனைத்து விவரங்களையும் லாவகமாக பேசி உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்கின்றனர். இதுமட்டுமல்லாமல் ஆன்லைன் ஹேக்கிங் மூலம் பணம் திருடப்பட்டால் அதன் முழு பொறுப்பையும் வங்கி நிர்வாகம் ஏற்கும். உங்களது கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டால் உடனே நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இதில் பார்க்கலாம்.
ரிசர்வ் வங்கியின் விதிகளின்படி வங்கியின் அலட்சியம் அல்லது தவறு காரணமாக ஏற்பட்ட இழப்பை வங்கி நிர்வாகம் ஈடு செய்ய வேண்டும். 2017 – 2018 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில், மோசடி நடந்த மூன்று நாட்களுக்குள் வங்கியில் நீங்கள் புகார் அளிக்க வேண்டும். அப்படி செய்தால் வாடிக்கையாளர்களுக்கு முழு இழப்புக்கும் ஈடு செய்யப்படும். 4 முதல் 7 நாட்களுக்குள் புகார் அளிக்கப்பட்டால், வாடிக்கையாளருக்கு 5 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும். புகார் அளித்த ஏழு நாட்களுக்குப் பிறகு இழப்பு வங்கியின் கொள்கையைப் பொருத்தது. எனவே உங்களது வங்கி பணம் திருடப்பட்டால் உடனடியாக வங்கியை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் நீங்கள் இழந்த மொத்த பணத்தையும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.