அனைத்துப்பள்ளிகளிலும் நூலக பாடவேளை உருவாக்கவும், நாளிதழ் வாசிக்க தனி நேரம் ஒதுக்கவும், தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவில் தெரிவித்துள்ளதாவது: “ஒவ்வொரு வகுப்புக்கும் வாரம் ஒருமுறை நூலக பாடவேளை, தனி அறை ஒதுக்குதல் அவசியம். போதிய புத்தகங்கள் இல்லாவிட்டால், பிற நூலகங்களை பயன்படுத்தி மாணவர்களுக்கு புத்தகங்கள் வழங்க வேண்டும். தமிழ், ஆங்கில நாளிதழ்களை காலை, மாலை, உணவு இடைவேளை நேரத்தில் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாணவரும் ஒரு புத்தகத்தை படித்து முடித்ததும் அது சார்ந்த ஓவியம் வரைதல், கதைச் சுருக்கம், கட்டுரை எழுதுதல், நூல் அறிமுகம், திறனாய்வு செய்தல் என சொந்த படைப்பை உருவாக்க வேண்டும். வகுப்பு, பள்ளி அளவில் 3 சிறந்த படைப்புகளை தேர்வு செய்தல், மாதந்தோறும் 20ம் தேதிக்குள் மாவட்ட அளவில் சிறந்த படைப்பிற்கு சான்றிதழ் வழங்கலாம். ஆசிரியர்களுக்கும் போட்டி உண்டு. மாநில அளவில் முதல் 25 பேர் வெளிநாட்டிற்கும், அடுத்த 25 பேர் வெளி மாநில தேசிய நூலகங்களுக்கும் அறிவு பயணம் அழைத்து செல்லப்படுவர்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.