Categories
தேசிய செய்திகள்

வந்துருச்சு மேலும் 2 புதிய தடுப்பூசி….. மத்திய அரசு அனுமதி….!!!

இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் என்ற இரண்டு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. 

கொரோனா வைரசுக்கு எதிராக பேராயுதமாக செயல்பட்டது தடுப்பூசி. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ரா ஜெனகா மருந்து நிறுவனமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை புனே நகரில் உள்ள சீரம் நிறுவனம் ‘கோவிஷீல்டு’ என்ற பெயரில் தயாரித்து வினியோகம் செய்தது. இதைத்தொடர்ந்து ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் ‘கோவேக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கி, தயாரித்து வினியோகம் செய்தது. இந்த 2 தடுப்பூசிகளையும் இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் பொதுமக்களுக்கு போடப்பட்டு வருகின்றது.

மார்ச் 1-ந்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோயாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேநேரம் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஏப்ரல் 1-ந்தேதி முதல் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. இந்த சூழலில் மே 1-ந்தேதி 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.  அதன்பின் தடுப்பூசி பணி வேகமடைய தொடங்கியது. கடந்த அக்டோபர் 21-ந்தேதி 100 கோடி தடுப்பூசிகள் என்ற இமாலய இலக்கை இந்தியா எட்டியது. தற்போது ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், 3-வது அலை உருவாகும் என்ற அச்சம் எழுந்தது. இதனைத்தொடர்ந்து கொரோனா பரவலை தடுக்க 15 முதல் 18 வயது வரையுள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஜனவரி 3ந்தேதி முதல் தொடங்க உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இதேபோல் ஜனவரி 10-ந் தேதி முதல் பூஸ்டர் செலுத்தும் பணி தொடங்கும் என்றும் முதல்கட்டமாக மருத்துவப்பணியாளர்களுக்கும், முன்களப்பணியாளர்களுக்கும், இணை நோய் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.  மேலும் ‘கோவின்’ இணையதளத்தில் சிறுவர்கள் பெயர் பதிவு செய்யும் பணி ஜனவரி 1-ந் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.  மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ், கோர்பிவேக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கி உள்ளது.

Categories

Tech |