தமிழக அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் 2022 ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த வருடாந்திர கால அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. இந்த அட்டவணையின் படி குரூப் 4 மற்றும் VAO நிலைகளில் காலியாக இருக்கும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாக உள்ளது.
இதையடுத்து குரூப் 4 மற்றும் VAO தேர்வுக்காக லட்சக்கணக்கானவர்கள் தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் VAO தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட பாடத் திட்டத்தை தேர்வு வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வகையில் 300 மதிப்பெண்கள் அடங்கிய குரூப்-4 தேர்வுக்கு SSLC தரத்தை வைத்து இந்தப் பாடத்திட்டங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழ் இலக்கியம், இலக்கணம், தமிழ் அறிஞர்களும் தமிழ் தொண்டும் ஆகிய பிரிவுகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 100 கேள்விகள் கேட்கப்பட உள்ளது.
இதையடுத்து பொதுஅறிவு பகுதியில் கேட்கப்படும் கொள்குறி வினாக்களுக்கு பொது அறிவியல், நடப்பு நிகழ்வுகள், புவியியல், இந்தியாவின் வரலாறு மற்றும் பண்பாடு, இந்திய ஆட்சியல், பொருளாதாரம், தேசிய இயக்கம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, வரப்பு மற்றும் சமூக அரசியல் இயக்கங்கள், தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம், திறனறி, மனக்கணக்கு மற்றும் முன்னறிவு போன்ற பிரிவுகளில் இருந்து 150 மதிப்பெண்களுக்கு 100 வினாக்கள் கேட்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பான அனைத்து விவரங்களையும் டிஎன்பிஎஸ்சி அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம்.