கொரோனா தொற்றின் பரவல் காரணமாக கடந்த கல்வி ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும்அடைக்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடைபெற்றது. இதனையடுத்து கொரோனா தொற்றின் 2-ம் அலை பாதிப்பு குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கியது. அதன்படி பாதிப்பு குறைந்த மாநிலங்கள் வாரியாக கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டது. எனினும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளும் முறையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் காற்று மாசுபாட்டின் காரணமாக டெல்லியில் 6 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளின் மாணவர்களுக்கு பள்ளிகள் கிட்டத்தட்ட ஒருமாத காலம் மூடப்பட்டு, டிசம்பர் 18, 2021 அன்று மீண்டும் திறக்கப்பட்டது. ஆகவே வகுப்புகள் தற்போது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் நடைபெற்று வருகிறது. மேலும் டிசம்பர் 27-ம் தேதி முதல் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் டெல்லி பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 15, 2022 வரை குளிர்கால விடுமுறை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கல்வி இயக்குநரகத்தால் டெல்லி அரசுப் பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு குளிர்கால விடுமுறை அளிக்கப்படும் என்றும் இந்த நாட்களில் மாநிலத்தில் ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் வகுப்புகள் நடத்தப்பட கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெல்லி முழுவதும் கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் அதிகரித்து வருவதால் அதற்கான கண்காணிப்பு நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனைகள் அதிகரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நோய்த்தொற்று அதிகரிப்பதால் மாணவர்களின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப தயங்குகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.