காட்டு யானைகள் ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்திய சம்பவம் பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, ஓசூர் ஆகிய வனப்பகுதிகளில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வெளியேறிய 70-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த காட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து அங்குமிங்கும் சுற்றி திரிகிறது. இந்நிலையில் கண்டகானபள்ளி கிராமத்திற்குள் நுழைந்த காட்டு யானைகள் விவசாயிகளான வெங்கடேஷ், திருப்பதி ஆகியோருக்கு சொந்தமான விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மிதித்து நாசப்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இதனையடுத்து பல லட்ச ரூபாய் செலவு செய்து அறுவடைக்கு தயாரான நேரத்தில் பயிர்களை காட்டு யானைகள் சேதப்படுத்தியுள்ளது. எனவே காட்டு யானைகள் ஊருக்குள் நுழைவதை தடுத்து சேதமான பயிர்களுக்கு உரிய இழப்பீடு தொகையை தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.