திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 1-ஆம் தேதி ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழா ஆகிய விழா நடைபெற உள்ளது. வருகின்ற 13 ஆம் தேதியிலிருந்து 22-ம் தேதி வரை மட்டும் முக்கிய விஐபி பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய விஐபி பிரேக் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சாமி தரிசனம் செய்ய வரும் விஐபி பக்தர்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்று மற்றும் 48 மணி நேரத்துக்கு முன் எடுத்த கொரோனா நெகட்டிவ் சான்று ஆகியவற்றை கொண்டு வர வேண்டும். ஆங்கில புத்தாண்டு தரிசனம் மற்றும் வைகுண்ட ஏகாதசி விழாவிற்கு கொண்டு வரும் சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்பட மாட்டாது. வைகுண்ட ஏகாதசியான 13ஆம் தேதியன்று ஏழுமலையானை தரிசிக்க எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அரசு அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். சாதாரண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இதையடுத்து ஜனவரி மாதம் 11 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தேவஸ்தான விடுதி அறைகள் முன்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கல்யாண கட்டாக்களில் பக்தர்கள் தங்களின் தலைமுடி காணிக்கை செய்ய போதிய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு நவீன கருவிகள் பயன்படுத்தப்படும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருமலையில் உள்ள தரிகொண்ட வெங்கமாம்பா அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு தினமும் அதிகாலை 4 மணி முதல் இரவு 12 மணிவரை 10 நாட்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்களுக்கு மருத்துவ சேவை அளிக்க பல்வேறு பகுதிகளில் மருத்துவ குழுக்கள் அமைக்கப்பட உள்ளது. மேலும் திருமலையில் வாகனங்களை நிறுத்த போதிய இட வசதியும் செய்து தரப்படும் என்று திருமலை- திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.