துபாயில் வீடுகளில் இருக்கும் பால்கனிகளை எவ்வாறு உபயோகப்படுத்துவது என்பது தொடர்பில் அந்நாட்டின் நகராட்சி ஆலோசனை அளித்திருக்கிறது.
துபாயில் வசிக்கும் மக்கள் நகரம் முழுக்க அழகான தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்றும் தங்கள் வீடுகளின் அடுக்குமாடி பால்கனிகளை தவறாக உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அந்நாட்டின் நகராட்சி செய்தி வெளியிட்டிருக்கிறது. அதாவது, மக்கள் தங்கள் பால்கனிகளை தவறான முறையில் உபயோகப்படுத்தி, அதனால் சமூக பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு வழங்கக்கூடாது.
மேலும், பிறரின் கண்களை உறுத்தும் வகையில் பால்கனிகள் இருக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளது. அதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் மக்களுக்கு, துபாய் நகராட்சி ட்விட்டரில் தெரிவித்திருப்பதாவது, “நகரின் அழகியல் மற்றும் நாகரிகமான தோற்றத்தை கெடுக்கும் வகையான செயல்களை செய்யக்கூடாது” என்று தெரிவித்திருக்கிறது.
அதன்படி, பால்கனியில் துணியை காயப்போட கூடாது, சிகரெட் துண்டுகளை பால்கனியில் இருந்து வெளியில் எறியக் கூடாது, அங்கு குப்பைகளை கொட்டக்கூடாது, பால்கனியிலிருந்து அசுத்தமான தண்ணீர் வெளியேறக்கூடாது, பறவைகளுக்கு உணவு வைக்கக்கூடாது. மேலும் அங்கு தொலைக்காட்சிக்கான ஆண்டெனா மற்றும் டிஸ்களை வைத்திருக்கக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மீறும் பட்சத்தில் 500 லிருந்து 1500 திர்ஹாம் வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.