போலி வனத்துறை அதிகாரியாக நடித்து பெண்ணை திருமணம் செய்த நபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகரில் ஏங்கல்ஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனுமந்தன்பட்டி சேர்ந்த ஹர்சிலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்களுக்கு ஒரு வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் ஹர்சிலாவை பெண் பார்க்க சென்றபோது ஏங்கல்ஸ் தன்னை ஒரு வனத்துறை உயர் அதிகாரி என்றும், திண்டுக்கல்லில் இருந்து சபரிமலை வரை உள்ள வனப்பகுதியில் தனது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
இதனையடுத்து வனத்துறை அலுவலகம் முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படம், வனத்துறை ஊழியர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை காட்டி பெண் வீட்டாரை நம்ப வைத்துள்ளார். இதனை நம்பிய குடும்பத்தினர் ஹர்சிலாவை ஏங்கல்ஸ் திருமணம் முடித்து வைத்துள்ளனர். மேலும் திருமணத்தின் போது 65 பவுன் நகைகளையும் 10 லட்சம் மதிப்புள்ள பொருள்களையும் வரதட்சணையாக கொடுத்துள்ளனர், இந்நிலையில் தற்போது ஏங்கல்ஸ் புதிதாக ஹெலிகாப்டர் தளம் அமைக்க வேண்டும் என்றும் அதற்காக பணம் கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த ஹர்சிலா பெற்றோர் வனத்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது ஏங்கல்ஸ் வனத்துறை அதிகாரி இல்லை என்பதும், அவர் தனியார் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதும் தெரிய வந்துள்ளது. இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ஹர்சிலா மற்றும் அவரது குடும்பத்தினர் இதுகுறித்து உத்தமபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வனத்துறை அதிகாரியாக நடித்து ஏமாற்றிய ஏங்கல்சை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.