தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக அரசு ஊரடங்கு தளர்வு களை அறிவித்து வருகிறது. இதனிடையே கொரோனா வகை உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் இந்தியாவில் அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சென்னையில் கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதித்து நேற்று உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். பண்டிகை காலங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் வரும் 31ம் தேதி கடற்கரைகளில் பொதுமக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு எச்சரித்துள்ளது.மேலும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவார்கள். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். டிசம்பர் 31-ஆம் தேதி வெளியூர் செல்பவர்கள் இருசக்கர வாகனங்களில் செல்வதைத் தவிர்த்து ரயில் அல்லது பேருந்துகளில் பயணிப்பது நல்லது. எனவே பொதுமக்கள் அனைவரும் அவர்களது வீடுகளிலேயே புத்தாண்டை வரவேற்று கொண்டாடுங்கள்.