ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து கார் பரிசு விழுந்திருப்பதாக கூறி பெண் ஒருவர் ஏமாற்றும் சம்பவம் தூத்துக்குடியில் அரங்கேறியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் முக்காணி பகுதியை சேர்ந்தவர் கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. இவரை செல்போனில் தொடர்புகொண்ட பெண் குரல் ஒன்று ஸ்னாப்டீல் நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறி தங்களுக்கு கார் பரிசு விழுந்துள்ளது என்று கூறி அதற்கான சான்று வாட்ஸ் அப்பில் அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தேவை இல்லை எனில் 12,500 ரூபாய் பணத்தை தாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் கமிஷனாக செலுத்தினால் 12 லட்சம் வங்கி கணக்கில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் ஆசைவார்த்தை கூறி உள்ளார்.
தன்னை ஏமாற்ற நடக்கும் முயற்சி என்பதை அறிந்த கேபிள் ஆப்பரேட்டர் பாலாஜி. நேரில் வந்து பெற்றுக் கொள்வதாகக் கூறிய பொழுது அதற்கு மறுப்பு தெரிவித்து அந்த பெண்ணிடம் திருவிளையாடல் படத்தில் தருமி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாகேஷ் போல பேசி மோசடியில் இருந்து சாமர்த்தியமாக தப்பியுள்ளார். இது போன்று யாராவது குறுந்தகவல் அனுப்பினாலோ அல்லது ஆசையை தூண்டும் விதமாக பேசினாலோ அது ஒரு மோசடி செயல் என்பதை உணர்ந்து உஷாராக இருங்கள் என்றும் எக்காரணத்தைக் கொண்டும் வங்கி கணக்கு விவரங்களை தெரிவிப்பது அவர்கள் சொல்லும் வங்கி கணக்கிற்கு பணம் செலுத்துவது வேண்டாமென்றும் கவர்ச்சிகரமான இதுபோன்ற அறிவிப்புகளை கண்டு மோசம் போகாதீர்கள் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.