பருவமழை பாதிப்புகளில் இருந்து மீள விரைவில் நிதி ஒதுக்கிட வேண்டும் என்று கோரி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில் “தமிழ்நாட்டில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் வரலாறு காணாத மழை பெய்த சூழ்நிலையில் தமிழ்நாடு அரசு விரைவாக நிவாரண பணிகளை மேற்கொண்டு இயல்பு நிலையை மீட்டெடுத்தது.
பெருமழையினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக, மத்திய குழுவினர் 21-ம் தேதி அன்று தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொண்டதை குறிப்பிட்டு தமிழ்நாட்டில் தற்காலிக சீரமைப்பு பணிகளுக்காக 1,510.83 கோடி ரூபாயும், சாலைகள் மற்றும் பாலங்கள் போன்ற சேதமடைந்த உள்கட்டமைப்புகளை நிரந்தரமாக சரி செய்வதற்கு 4,719.62 கோடி ரூபாயும் நிவாரணம் வழங்கிட கோரி தமிழ்நாடு அரசின் சார்பில் 16/11/2021, 25/11/2021 மற்றும் 15/12/2021 ஆகிய நாட்களில் ஆதாரங்களுடன் கூடிய விரிவான அறிக்கையை சமர்பித்தோம். எனவே வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்கவும் தேவையான நிதியினை ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று உள்துறை அமைச்சகத்திற்கு வலியுறுத்துமாறு அந்த கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.