அமெரிக்காவில் நாவல் எழுதிவிட்டு 5 பேரை கொலை செய்த மர்ம நபர் தொடர்பில் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள டென்வர் என்ற பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று மர்ம நபர் ஒருவர் தெருவில் நின்று கொண்டிருந்த 5 பேரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தப்ப முயற்சித்த வேளையில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆனால் அந்த நபர் யார் ? என்று தெரியாமல் இருந்த நிலையில் தற்போது காவல்துறையினர் நடுநடுங்க வைக்கும் சில தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
அதாவது Lyndon McLeod ( 47 ) என்னும் அந்த நபர் நடுநடுங்க வைக்கும் நாவல்கள் சிலவற்றை எழுதியுள்ளார். மேலும் தன்னுடைய நாவல்களில் குறிப்பிட்டுள்ளது போலவே Lyndon McLeod டாட்டூ கடைகளில் பணிபுரியும் ஊழியர்களை குறிவைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கொலை செய்யப்பட்ட 5 பேரில் மூன்று பேர் டாட்டூ கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் என்பதும், மற்ற இருவர் டாட்டூ கடைகளுக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்தவர்கள் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த கொடூர கொலை சம்பவத்தை அரங்கேற்றிய அந்த நபருக்கு புத்தகம் வெளியிடும் நிறுவனம் ஒன்று உள்ளதாகவும், அந்நிறுவனத்தின் மூலம் Lyndon McLeod நடுநடுங்க வைக்கும் நாவல்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அதோடு மட்டுமில்லாமல் அந்த நபர் 2018 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார். அதில் பாலியல் தாக்குதல் மற்றும் வன்முறைச் சம்பவங்களை ஆதரித்து அநேக கதைகள் இடம்பெற்றுள்ளது.
அதேபோல் அவருடைய நாவல் கதையில் கதாநாயகன் டாட்டூ கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களை கொலை செய்வது போல சித்தரிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போதைய விசாரணையில் Lyndon McLeod-ம் டாட்டூ தொழிலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஆனால் இந்த கொலை சம்பவம் தொடர்பில் உறுதியான தகவல் எதுவும் இல்லை என்று காவல்துறையினர் கூறுகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்டவர்கள் கொலைகாரனுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்களாக இருக்கலாம் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.