கல்லூரி வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி நுழைந்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கோவைப்புதூர் வனப்பகுதிக்கு அருகில் கடந்த சில நாட்களாக சிறுத்தை புலி சுற்றி திரிகிறது. இதனை பிடிப்பதற்காக வனத்துறையினர் கூண்டு வைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சிறுத்தைபுலி ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரி வளாகத்திற்குள் புகுந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த 2 நாய்களை கொன்று சென்றுள்ளது. மேலும் தரையில் இருந்த ரத்தக் கரையில் சிறுத்தைபுலியின் கால் தடங்கள் பதிவாகியுள்ளது.
இதனையடுத்து கல்லூரி வளாகத்திற்குள் சிறுத்தைப்புலி நுழைவது, படிக்கட்டில் இறங்குவது போன்ற சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இது குறித்து வனத்துறையினர் கூறும்போது தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு சிறுத்தை புலியை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். எனவே சிறுத்தை கூண்டில் சிக்கும் வரை பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர்.