கூட்டுறவு வாணிப கிடங்கில் வைத்துள்ள பொங்கல் தொகுப்பினை ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தில் பூசாரிபாளையம் பகுதியில் நான்கு இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு வைக்கப்பட்டு, அது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றது. ஆனால் கிடங்குகளில் உள்ள பொங்கல் தொகுப்புகளை ஒவ்வொரு ரேஷன் கடை ஊழியர்களும், தங்கள் சொந்த செலவில் வாடகை வாகனம் பிடித்து கடைகளுக்கு எடுத்துச் செல்வதற்கு அதிகாரிகள் நிர்பந்தனை செய்வதாக ஊழியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக சில ரேஷன் கடை ஊழியர்கள் தெரிவித்ததாவது நுகர்பொருள் வாணிபக் இடங்களிலுள்ள பொங்கல் பரிசு தொகுப்புகளை அதிகாரிகள், தங்கள் சொந்த அளவில் வாகனங்களை பிடித்து எடுத்துச் செல்லும்படி கூறுகின்றன. இதற்கு ஏற்றுக்கூலி, இறக்குக்கூலி மற்றும் வண்டி வாடகை அனைத்தையும் 8 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவாகிறது. இந்த பணத்தை எங்களால் கொடுக்க முடியவில்லை. அப்படி கொடுத்தாலும், அந்த தொகை எங்களுக்கு திரும்ப கொடுக்கவில்லை.
எங்களுக்கு சம்பளத்தை தவிர வேறு எந்த வருமானமும் இல்லை. இதனால் பொங்கல் தொகுப்புகளை தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலமாக ரேஷன் கடைகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பார்த்திபன் தெரிவித்தபோது ‘பொங்கல் பொருட்கள் வழங்க ரேஷன் கடை ஊழியர்கள் ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வேண்டியது இல்லை, அப்படி யாராவது நிர்பந்தம் செய்தால் கடை ஊழியர்கள் தங்களுக்கு புகார் தெரிவிக்கலாம், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளார்.