தென் ஆப்பிரிக்காவில் முதன் முறையாக கண்டறியப்பட்ட கொரோனாவில் இருந்து உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் இதுவரை 700க்கும் மேற்பட்டவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது. டெல்லியில் தொற்று பாதிப்பு தினசரி பாதிப்பு 0.5 சதவீதம் என இருப்பதால் அங்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் டெல்லியில் மினி ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், உள் அரங்குகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசியமான கடைகள் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து உணவு விடுதிகள் 50% இருக்கைகளுடனும், பொதுப்போக்குவரத்து 50% பயணிகளுடனும், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கு மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டதை அடுத்து கோவில்கள் மூடப்பட்டது. ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பால் பொதுமக்கள் அச்சம்கொள்ள வேண்டாம் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.