சட்டவிரோதமாக லாரியில் குட்கா கடத்தி வந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்திற்கு பாலக்காடு வழியாக லாரியில் சட்டவிரோதமாக குட்கா வருவதாக மாவட்ட போலீஸ் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அந்த தகவலின் படி போலீஸ் துணை சூப்பிரண்டு கலைச்செல்வன் மற்றும் காவல்துறையினர் பஞ்சப்பள்ளி பகுதியில் வைத்து ஒரு லாரியை மடக்கிப்பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் 50 தேங்காய் முட்டையில் குட்காவை கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
அதன்பின் காவல்துறையினர் லாரியை காவல்நிலையத்திற்கு ஓட்டி சென்றுள்ளனர். மேலும் ஓட்டுனரிடம் நடத்திய விசாரணையில் அவர் செம்மனூர் கிராமத்தில் வசிக்கும் இளங்கோ என்பது தெரியவந்துள்ளது. இவர் பெங்களூரில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இளங்கோவை கைது செய்ததோடு குட்காவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.