தேசிய தலைநகர் டெல்லியில் அதிகரித்து வரும் ஒமிக்ரான் பாதிப்புகளுக்கு மத்தியில் மினி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதனையடுத்து டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகமும் (JNU) நேற்று (டிச.30) முதல் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை வளாகத்தில் இரவு ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளது. இதுகுறித்து JNU வெளியிட்டுள்ள தனது உத்தரவில், அனைத்து ஆப்லைன் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படும் என்றும் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மைய நூலகம் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பின் JNU வளாகத்தில் அவசர சேவைகள், மருத்துவ அவசரநிலை மற்றும் பொருட்கள் வழங்கல் போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் அடையாள அட்டையுடன் அனுமதிக்கப்படுவார்கள். அதேபோன்று விமான நிலையம், ரயில் நிலையங்களில் இருந்து JNU வருபவர்கள் டிக்கெட் உள்ளிட்ட அடையாளத்துடன் வளாகத்திற்குள் பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தவிர JNUன் வணிக வளாகம், தப்தி, பச்சிமாபாத், பூர்வாஞ்சல் வளாகங்கள் ஆகியவற்றில் செயல்பட்டு வரும் அங்கீகரிக்கப்பட்ட கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரையும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கேன்டீன்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 50 சதவீத இருக்கை வசதியுடன் திறக்க அனுமதிக்கப்படுள்ளன. இதனிடையில் JNU உத்தரவின்படி, வெளிப்புற யோகா பயிற்சிகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஊரடங்குச் சட்டம் அமலில் உள்ள நேரத்தில் யாரும் வளாகத்திற்குள் செல்ல வேண்டாம் என்றும் அவசரகால இயக்கத்தைத் தவிர மற்ற அனைத்திற்கும் வளாக வாயில்கள் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.