மத்திய அரசு நாடு முழுவதிலும் உள்ள விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த அடிப்படையில் கடந்த 2018-ம் ஆண்டு இந்திய விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் விதமாக பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM – KISAN) என்னும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக சொந்த விவசாய நிலம் வைத்திருக்கும் அனைவரும் விண்ணப்பித்து பயன்பெற முடியும். அவ்வாறு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு வருடத்துக்கு 6 ஆயிரம் ரூ ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்த ஊக்கத்தொகை 4 மாதங்களுக்கு ஒருமுறை ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த அடிப்படையில் இதுவரையிலும் 9 தவணைகள் செலுத்தப்பட்டுள்ளது. அதன்பின் 10-வது தவணை எப்போது கிடைக்கும் என்று விவசாய குடும்பங்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் டிசம்பர் இறுதிக்குள் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு விடும் என்று ஏற்கனவே அரசு தகவல் வெளியிட்டிருந்தது. இந்த திட்டத்தில் இதுவரையிலும் 1.6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாய குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து தற்போது 10-வது தவணை வழங்குவது தொடர்பாக மத்திய அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்த 10 வது தவணையான 2000 ரூ வரும் ஜனவரி 1ம் தேதி பகல் 12.30 மணியளவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் காணொளி காட்சி மூலமாக விடுவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக சுமார் ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கப்படுவதாகவும், இத்திட்டத்தின் வாயிலாக 10 கோடிக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் பயனடைவதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.