புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என மாவட்ட கலெக்டர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதினால் இம்மாவட்டத்தில் பூங்காக்கள், பொது இடங்கள், சாலைகள், தனியாருக்கு சொந்தமான உணவகங்கள், கேளிக்கை விடுதிகள், தங்கும் விடுதிகள் போன்ற பல இடங்களில் இரவில் நடத்தப்படும் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களில் பொதுமக்கள் பங்கேற்பது தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில் கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடப்படும் பட்சத்தில் தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ள தொற்றானது அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. இதனை அடுத்து சில வெளிநாடுகளில் இருந்து வரும் நபர்கள் மூலம் ஒமைக்ரான் தொற்றானது பரவி வருகின்ற சூழ்நிலை காரணத்தினால் நோய் தடுப்பு பணிகள் மேலும் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இரவு நேரத்தில் பொது இடங்களில் நடத்தப்படும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி இல்லை என கலெக்டர் தெரிவித்துள்ளார்.