அனுமதியின்றி லாரிகளில் சரளை மண் கடத்திய 2 டிரைவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காந்திபுரம் சந்திப்பில் கீழத்திருச்செந்தூர் கிராம நிர்வாக அலுவலர் வேல்ஜோதி தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக 2 லாரிகள் சரளை மண் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டிருந்தது. இதனைப் பார்த்த கிராம நிர்வாக அலுவலர் அந்த லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த சோதனையில் லாரிகளில் அனுமதியின்றி சரளை மண் கடத்தி வந்தது கிராம நிர்வாக அலுவலருக்கு தெரியவந்துள்ளது. இதனையடுத்து கிராம நிர்வாக அலுவலர் இதுகுறித்து திருச்செந்தூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த திருச்செந்தூர் தாலுகா காவல்துறையினர் லாரி டிரைவர்களான நெல்லை மாவட்டத்திலுள்ள நாங்குநேரி பகுதியில் வசிக்கும் சின்னதுரை, சேகர் மற்றும் லாரி உரிமையாளர் இசக்கி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து லாரி டிரைவர்கள் சின்னத்துரை, சேகர் ஆகியோரை கைது செய்ததோடு லாரிகளையும் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் லாரி உரிமையாளரான இசக்கியை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.