நீட் நுழைவுத் தேர்வு மற்றும் ஜெ.இ.இ போன்ற தேர்வுகளுக்கு கல்வித்துறை சார்பில் அமைக்கப்பட்ட இலவச பயிற்சி மையங்கள் எப்போது தொடங்கும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புக்கான தேசிய நுழைவு தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்பதற்காக மாநிலம் முழுக்க 413 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில் வார இறுதி நாட்களில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு ஏதுவாக உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன இப்பயிற்சி வகுப்பு தற்போது துவங்கப்படவில்லை அதிமுக அரசு திட்டம் என்பதால் திமுக அரசு இதனை கண்டு கொள்ளாமல் புறக்கணித்து வருகிறதா? என்று தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.
இதுதொடர்பாக சில மாநில கருத்தாளர்கள் கூறியதாவது: “கோவை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலர்களின் முயற்சியால் இந்த பயிற்சி வகுப்பு வார இறுதி நாட்களில் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மீண்டும் ஊரடங்கு என்றால் நேரடி பயிற்சி வகுப்பு நடத்துவதற்கு இயலாத நிலை ஏற்படும். எனவே விருப்பம் உள்ளவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு தொடங்கினால் மாணவர்கள் அச்சமின்றி நீட் தேர்வுக்கு தயாராவார்கள்” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.