நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடுமையான குளிர்காலம் நிலவி வருவதால் உத்திரப்பிரதேச மாநில பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில் மாநில அடிப்படைப் பள்ளிக் கல்வித்துறை முதல் முறையாக அனைத்து பள்ளிகளுக்கும் மாநிலம் தழுவிய குளிர்கால விடுமுறைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 31ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குளிர்கால விடுமுறை ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டுமே. இதற்கு முன்னதாக பள்ளிகளில் குளிர்கால விடுமுறைக்கான உத்தரவுகளை மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வந்த நிலையில் இந்த முறை மாநிலம் முழுவதும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. குளிர் கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தொடங்கும். மாணவர்கள் தங்கள் பெற்றோரின் ஒப்புதலுடன் மட்டுமே நேரடி வகுப்புகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவார்கள். கூடுதலாக ஆன்லைன் வகுப்புகளை தேர்வு செய்யும் மாணவர்களுக்கு ஆன்லைன் விரிவுரைகளை பள்ளிகள் நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.