கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியில் சிவானந்தன்-ஜிஜி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து(22). ஆவார். கடந்த 21-ந்தேதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இளைய மகள் ஜித்துவிற்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதால் வீட்டில் உள்ள அறையில் அவர் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் சென்றிருந்தனர்.
இதனிடையில் மூத்தமகள் விஸ்மயா தங்கையை பார்த்துக் கொண்டு வீட்டில் இருந்தார். இந்நிலையில் கணவன்-மனைவி இருவரும் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தபோது, வீட்டுக்குள் மூத்த மகள் விஸ்மயா உடல் கருகி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அப்போது இளைய மகள் ஜித்து வீட்டுக்குள் இல்லாததை பார்த்து உடனே அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜித்துவை தேடி வந்தனர். இந்த நிலையில் காக்க நாடு நகர் பகுதியில் சுற்றித்திரிந்த ஜித்துவை பரவூர் காவல்துறையினர் நேற்று கண்டுபிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட ஜித்துவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், “வீட்டில் கைகள் கட்டப்பட்ட நிலையில் இருந்தேன். அப்போது என் கைகள் கட்டுகளை அவிழ்த்து விடுமாறு அக்காவிடம் கூறினேன். அதன்படி அக்கா விஸ்மயா கை கட்டுகளை அவிழ்த்து விட்டார்.
இந்நிலையில் என் காதலை அக்கா கெடுத்து விட்டதாக கூறி அக்காவிடம் சண்டை போட்டேன். அப்போது அவளும் என்னிடம் சண்டையில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் கொண்டு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து அக்கா உடலில் சரமாரியாக குத்தினேன். இதில் சம்பவ இடத்தில் அக்கா உயிரிழந்து விட்டார். அவ்வாறு அக்கா இறந்தது தெரிந்தவுடன் அவர் உடலில் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை எடுத்து ஊற்றி தீ வைத்து எரித்தேன்” என்று கூறியுள்ளார்.