தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் 5 மாவட்டங்களில் மழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த போது, கடந்த 24 மணி நேரத்தில் கடலூர், திருப்பூண்டியில் தலா 8 செ.மீட்டரும், நாகப்பட்டினம், குடவாசலில் தலா 6 செ.மீட்டரும், திருத்துறைபூண்டியில் 5 செ.மீட்டரும் மழை பதிவாகி உள்ளது என்றார். மேலும் சென்னையில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் சில இடங்களில் வானம் லேசான மேகமூட்டத்துடனும் காணப்படும் என்று புவியரசன் குறிப்பிட்டார். சென்னையின் குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும்,அதிகபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும் என்று அவர் தெரிவித்தார். வருகிற 20-ஆம் தேதி அன்று தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அவர் கூறினார்.
தமிழகதின், கேரள எல்லையை ஒட்டி நிலவும் வளிமண்டல சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்று அவர் கூறினார். வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழகத்தில் சராசரி மழை அளவு 44 செ.மீட்டர் என்ற புவியரசன், அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 43 செ.மீட்டர் மழை பெய்துள்ளது என்றார். தமிழகத்தில் வேலூர், மதுரை, திருவண்ணாமலை, பெரம்பலூர், சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை குறைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.