நாடு முழுவதும் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்கு உதவும் வகையில் சில சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் ரயில்கள் படிப்படியாக இயக்கப்பட்டன. மேலும் கொரோனா காரணமாக டிக்கெட் முன் பதிவு செய்வதன் மூலம் மட்டுமே பயணம் மேற்கொள்ளும் வகையில் செயல்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கு கொரோனாவிற்கு முன்பு வழக்கத்திலிருந்த உணவு வழங்குதல்,குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட வைகளை மீண்டும் செயல்படுத்தும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கூடிய இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு செய்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்யும் விதமாக அறிவிக்குமாறு ரயில்வே துறையிடம் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து ரயில்வே இரண்டாம் வகுப்பு பெட்டிகள் அனைத்தும் முன்பதிவில்லா பெட்டிகளாக மாற்றப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி இரண்டாம் தேதி முதல் 39 ரயில்களில் முன்பதிவு இல்லாமல் பயணம் செய்ய முடியும். அவ்வகையில் மங்களூர் -நாகர்கோவில் இடையேயான ரயில்களில் ஜனவரி 4ஆம் தேதி முதலும், சென்னை மற்றும் கோவை இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இல் ஜனவரி 14ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.