கேரளாவிற்கு சட்ட விரோதமாக கஞ்சாவை கடத்த முயன்ற 2 பேரை கைது செய்த போலீசார் 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு அதிக அளவில் கஞ்சா கடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனை தடுக்க காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கூடலூரில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரித்ததில் அவர் கூடலூர் பனையதேவர் தெருவில் வசிக்கும் சசிகலா என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர் வைத்திருந்த பையில் 5 1/2 கிலோ கஞ்சாவும் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் சசிகலாவையும் கைது செய்துள்ளனர். மேலும் கேரளாவிற்கு கடத்துவதற்காக சசிகலாவிடம் கஞ்சாவை கொடுத்த கம்பத்தை சேர்ந்த மனோகரன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.