புத்தாண்டு அன்று கட்சி தலைவர்கள் தன்னை நேரில் சந்திப்பதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில். தமிழக மக்களின் பேராதரவுடன் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வருகிற முதல் ஆங்கிலப் புத்தாண்டான ஜனவரி 1 ஆம் நாளில் அந்த வெற்றிக்காக அயராது பாடுபட்ட கட்சி நிர்வாகிகள், உடன் பிறப்புகள் பலரும் என்னை நேரில் வந்து சந்தித்து வாழ்த்து தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னால் உணர்ந்து கொள்ள முடிகிறது.
இருப்பினும் ஒமைக்ரான் நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பில் உங்களின் முதலமைச்சரான நானும், அந்த கடமையை உணர்ந்தவர்களாக கட்சியின் உடன்பிறப்புகள் ஆகிய நீங்களும் இருப்பதால் உங்களின் மனப்பூர்வமான வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு ஜனவரி 1 அன்று என்னை சந்திப்பதை கண்டிப்பாக முற்றிலும் தவிர்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். அதுவே எனக்கு நீங்கள் வழங்குகின்ற சிறப்பான புத்தாண்டு பரிசாகும். மேலும் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்து பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.