தமிழகத்தில் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்கள், அகவிலைப்படி பெறத் தகுதியுள்ள ஏனைய பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியினை உயர்த்தி தருவதாக முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனை சட்டப்பேரவையில் 110-விதியின் கீழ் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அறிவித்திருந்தார். அதன்படி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 14 சதவீதமாக உயர்த்தி வழங்க இருப்பதாக அறியப்படுகிறது. அதாவது 17 % இருந்த அகவிலைப்படியை 31 % உயர்த்த இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக 8,724 கோடி ரூபாய் அரசுக்கு செலவு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சி மற்றும் டி பிரிவு பணியாளருக்கு 3000 ரூ வழங்க இருப்பதாகவும் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 500 ரூ வழங்க உள்ளதாகவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் வேலை பார்க்கும் பணியாளருக்கு பொங்கல் தின விழாவை முன்னிட்டு 500 ரூ வழங்கவும் அரசு முடிவெடுத்துள்ளது. அதுமட்டுமின்றி முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 500 ரூபாயும் வழங்கவும் அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக 169.56 கோடி செலவு அரசுக்கு ஏற்பட்டு உள்ளது. கொரோனா தொற்று காரணமாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டாலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி அகவிலைப்படியை உயர்த்தி தருவதால் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி நிலவுகிறது. இது இன்று முதல் அமல்படுத்த இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு புத்தாண்டு தினம் அன்று அகவிலைப்படி உயர்த்தி தருவதால் அரசு ஊழியர்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.