நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது.
இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் இல்லை என்றாலும், வேகமாக பரவும் தன்மை கொண்ட உறுமாறிய தொற்றாக இருப்பதால் இந்தியாவில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பரிசோதனைகள் தீவிரப்படுத்த மத்திய அரசு மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.
இது பற்றி மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதிய கடிதத்தில் காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், உடல்வலி, களைப்பு, வயிற்று போக்கு களைப்பு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை நோயாளியாக கருதி கண்டிப்பாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கவேண்டும். ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜன் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.