தமிழகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை பெய்தது. இதனால் அனைத்து மாவட்டங்களில் உள்ள ஏரி மற்றும் குளங்கள் நிரம்பி வழிந்தது. அதுமட்டுமில்லாமல் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் மழைநீர் புகுந்து சேதம் அடைந்தது. மேலும் நகர் புறங்களில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அரசு மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்பிறகு கடந்த சில வாரங்களாக மழை குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில், கடந்த வாரம் முதல் மீண்டும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி வீசி வருவதால் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது வளி மண்டல மேல் அடுக்கில் புதிதாக உருவாக்கியுள்ள காற்று சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் தற்போது புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி திருவள்ளுவர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் காரைக்கால் ஆகிய 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் இன்று மற்றும் நாளை அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் கடல் பகுதியில் காற்று 40 கி.மீ வேகத்தில் வீசக் கூடும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.